பேச்சை கேட்காமல் ரீலிஸ் போட்ட தங்கை, அண்ணன் செய்த காரியம் - கொடூர சம்பவம்!
அண்ணனின் பேச்சை கேட்காமல் ரீலிஸ் போட்டதால் அவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ போட்ட தங்கை
தெலுங்கானா மாநிலம், பத்ராத்திரி கோத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் நர்சிங் படிப்பை முடித்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்ஸாக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் டிக்டாக் போன்ற வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு வந்தார்.
இவரது வீடியோவிற்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இது பற்றி அறிந்த அவரது அண்ணன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட வேண்டாம், அது நல்லதல்ல ஒரு சிலர் ஆபாச கருத்துகளையும் வெளியிடலாம் என கூறி எச்சரித்தார்.
கொடூரம்
இந்நிலையில், அவரது பேச்சை கேட்காமல் அந்த நர்ஸ் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வந்தார். இதனை கண்ட அவரது அண்ணன் கடுமையாக பேசினார். அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அவரது தங்கையை தலையில் தாக்கியுள்ளார்.
இதனால் தங்கை மயக்கமடைந்தார், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவரது தாயார் அந்த மகன் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.