பலபேருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்; அவரது பிரசவத்தில் நேர்ந்த சோகம் - கதறும் பெற்றோர்!
மகப்பேறு மருத்துவர் ஒருவர் தனது பிரசவத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகப்பேறு மருத்துவர்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் அஞ்சுதா (26). இவர் புதுக்கோட்டை அரசு மகப்பேறு ராணியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தார். அஞ்சுதா கர்ப்பமாக இருப்பதால் கடந்த 6 மாத காலமாக மகப்பேறு மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மூச்சுத்திணறலும் அதிகமானது. இதனையடுத்து அவர் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழப்பு
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், அஞ்சுதாவுக்கு அறுவை சிகிச்சையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. ஆனால், அவருக்கு கருப்பை குழாயில் ரத்தப்போக்கு அதிகரித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அஞ்சுதாவின் தாய், தந்தை மற்றும் கணவர் ஆகியோர் கதறி அழுதனர். பல தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்த அவர், தனது பிரசவத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.