சவர்மாவை தொடர்ந்து சிக்கன் ரோல்.. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி- சோதனையில் காத்திருந்த ஷாக்!
சவர்மா கடையில் கெட்டுப்போன சிக்கன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கீழ நான்காம் வீதியில் பெரியார் நகரை சேர்ந்தவர் யூசுப் . இவர் அதே பகுதியில் சுமார் 4 ஆண்டுகளாக சவர்மா கடை நடத்தி வருகிறார். அந்தக் கடையில் நேற்று இரவு அப்துல் ஹக்கீம் என்பவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் சிக்கன் ரோல் சாப்பிட்டுள்ளார்.இதனால் அவர்களுக்கு வயிற்றுவலி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரின் கடையை சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் கெட்டுப்போன 5 கிலோ சிக்கன் இருப்பது தெரிய வந்தது .
கெட்டுப்போன சிக்கன்
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரவீன் குமார், அந்த சிக்கனை பினாயில் ஊற்றி அளித்துவிட்டு உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ,
“கடந்த இரண்டு ஆண்டுகளாக சவர்மாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை விதித்து வாய்மொழி உத்தரவு வழங்கி உள்ள நிலையில் அதனை மீறி சவர்மா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சவர்மா கடை நடத்த வேண்டும் என்றால் உரிய அனுமதி பெற்ற பின்னர்தான் அந்த கடையை நடத்த வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர் பாதிக்கப்பட்டவர்கள் சிக்கன் ரோல் சாப்பிட்டதால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் அவர்கள் சாப்பிட்ட உணவால் பாதிப்பு ஏற்பட்டதா என ஆய்வுக்கு பின்னர்தான் அது தெரியவரும்” என்று கூறினார்.