திமுக கூட்டணி வேண்டாம் என்று நான் கூறினால்.. திருமாவளவன் பரபரப்பு தகவல்
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நேரடி எதிரியாக இருப்பது விசிக என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி
செங்கல்பட்டில் நடந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நேரடி எதிரியாக இருப்பது விசிக தான். பாஜகவா, விசிகவா என்பது பிரச்சினை இல்லை.
இதை ஜாதியாக கொண்டு செல்வதுதான் பிரச்சினை. விசிக குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவர்கள் என்கிற பொய்யான நோக்கத்தை பரப்புகிறார்கள். இது முழுக்க முழுக்க அரசியல். இதன் மூலம் திமுகவுக்கும், விசிகவுக்கும் உரசல் ஏற்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.
திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விசிக வெளியேறிவிட்டால் யாரும் நம்மைப் பற்றி பேச மாட்டார்கள். நாம் அவர்களின் டார்கெட்டே கிடையாது. பாஜகவையும், ஆர்எஸ்எஸ்ஸையும் திரும்ப திரும்ப விமர்சனம் செய்யக் கூடிய ஆளாக இருக்கிறாரே.
திருமா கருத்து
சனாதன எதிர்ப்பை உயர்த்தி பிடிக்கிறாரே. திமுக கூட்டணி கட்டுக் கோப்பாக இருக்க இவர் உற்ற துணையாக இருக்கிறாரே. இதுதான் பிரச்சினை. திமுக கூட்டணி வேண்டாம் என்று நான் நாளை அறிக்கை விட்டால் ஆஹா.. ஓஹோ என்று மகிழ்ச்சியடைவார்கள்.
ஏன் இன்னொரு தீபாவளி பண்டிகை போல கொண்டாடுவார்கள். திருமாவளவன் திமுக கூட்டணிக்கு தூண் போல இருக்கிறாரே என்ற ஆதங்கம் தான் அனைவருக்கும். திமுக கூட்டணியை பாதுகாக்கும் இயக்கமாக விசிக இருக்கிறது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பதுதான் முக்கியம். இந்த மதச்சார்பற்ற என்பதுதான் அம்பேத்கரின் அரசியல். அம்பேத்கரின் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டிய அரசியல். அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டத்தின் மிக முக்கியமான கோட்பாடு மதச்சார்பின்மை. அம்பேத்கரை விமர்சிக்கும் துணிச்சல் பாஜக ஆர்.எஸ்.எஸ்.க்கு கிடையாது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விசிகவின் பங்கு முக்கியமானது. அம்பேத்கர், பெரியார் அரசியல் ஒன்றுதான். அந்த அரசியலுக்காக தான் திராவிட அரசியலுக்கும் நாங்கள் துணை நிற்கிறோம். திராவிட அரசியல் என்பது அம்பேத்கர் பேசிய அரசியல் தான்.
திராவிட அரசியலை சிதைக்க முயற்சிக்கிறார்கள் என்றால் அம்பேத்கரின் அரசியலை சிதைக்க முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். அதனால் தான் நாங்கள் தலையிடுகிறோம். அம்பேத்கர் என்ன கனவு கண்டாரோ, அதை நனவாக்க வேண்டும் என்கிற கொள்கையுடன் களத்தில் உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.