திமுகவிற்கும் விஜய்க்கும் ரகசிய டீலிங் உள்ளதா? சந்தேகத்தை கிளப்பும் திருமாவளவன்
திமுகவிற்கும் விஜய்க்கும் ரகசிய டீலிங் உள்ளதா என திருமாவளவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
கரூர் தேர்தல் பிரச்சாரம்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தவெக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர் நிர்மல் குமார் தலைமைறைவாக உள்ள நிலையில், தனிப்படை காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.
திமுக விஜய் இடையே டீலிங்?
இந்நிலையில், விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என கூற வேண்டும்.
விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யக்கூடாதது என்று அழுத்தம் கொடுத்தது யார்? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக மற்றும் தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா?
ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பி விடுவார்கள் என நினைத்து விஜய் வீடியோவில் அப்படி பேசியுள்ளார். விஜய் கொள்கை எதிரியாக சொல்லும் பாஜகவே, அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது. 3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்எஸ்எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார்.
அண்ணா ஹசாரேவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததைப் போல், தவெக தலைவர் விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. விஜயைச் சுற்றி இருக்கும் அனைவரும் பாஜக பயிற்சிப் பட்டறையில் பாடம் பயின்றவர்கள். விஜய் போன்ற ஆபத்தான சக்தியிடம் சிக்கினால் தமிழகம் கலவர பூமியாகி விடும்." என பேசியுள்ளார்.