ஊசியை விழுங்கிய சிறுமி - அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் செய்த காரியம்?
தவறுதலாக விழுங்கிய ஊசி சிறுமியின் நுரையீரலில் சிக்கி கொண்டது.
ஊசி விழுங்கிய சிறுமி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு புதிய ஆடையை அணிய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக உடையில் சிக்கி இருந்த 4 சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசி அவரது வாய் வழியாக உடலுக்குள் சென்றுள்ளது.
பிறகு அந்த ஊசி சிறுமியின் நுரையீரலில் சென்று சிக்கி உள்ளது. இதனால் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது பெற்றோர் பதற்றத்துடன் தஞ்சையில் உள்ள ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
அறுவை சிகிச்சை?
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவ குழு நுரையீரலில் ஊசி இருப்பதை உறுதி செய்தனர். சோதனையில் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே இந்த ஊசியை அகற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது மருத்துவக்குழு பிராங்கோஸ்கோப்பி என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம்
கத்தி,ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்யாமல் அகற்ற முடியும் என தெரிவித்தனர்.இதை தொடர்ந்து, சிறுமிக்கு இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக மூன்றரை நிமிடங்களில் நுரையீரலில் பாதிப்பு ஏற்படாமல், ஊசியை அகற்றி சிறுமியின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி அசத்தியுள்ளனர். மருத்துவத்துறையில் நடக்கும் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இது சாத்தியமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.