2026ல் இணையும் அதிமுக - பாஜக? நயினார் நாகேந்திரன் சொன்னதை கேட்டீங்களா!
அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன்
கடந்த ஆண்டு அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. 2024 லோக்சபா தேர்தலில் தனித்தனி அணியாகப் போட்டியிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இதனையடுத்து 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமையுமா என்ற கேள்வி வலம் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பாஜக சட்டமன்ற கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என்று அழைக்கிறீர்கள்? நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
அதிமுகவுடன் இணக்கம்?
அப்போது பேசிய அவர், அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி. மேற்கு வங்கத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதற்காக போர்க்கொடி தூக்கினர். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
ஏனென்றால் முதல்வர் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருக்கிறார். சட்டம ஒழுங்கு சரியாக இல்லை. எல்லா பள்ளிகளின் வாசலிலும் கஞ்சா விற்கின்றனர். முதல்வர் சைக்கிள் ஓட்டுவதை குறையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்றார்.
விஜய் அரசியல் மாநாடு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காதது குறித்த கேள்விக்கு, எந்த கட்சி ஆரம்பித்தாலும் அவர்களுக்கென்று ஒரு சுதந்திரம் உள்ளது. கட்சி மாநாடு நடத்துவதற்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும். ஒரு வேளை ஆளுங்கட்சி விஜய்யை பார்த்து பயப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.