மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என்று அழைக்கிறீர்கள்? நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

tamilnadu-politics
By Nandhini Jun 23, 2021 08:08 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் 16-வது சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசு ஒன்றியம் என்று பயன்படுத்துவதை குறித்து கேள்வி எழுப்பினார்.

புதிதாக ஆட்சி ஏற்றத்திலிருந்து தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதக்கூடிய கடிதங்களில் மத்திய என்ற வார்தையை பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறது. இதற்கு முதல்வர் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

அதற்கான விளக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

இது குறித்து முதல்வர் விளக்கம் அளித்து பேசுகையில், ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதை சிலர் சமூக குற்றம் என்று கூறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றியம் என்ற சொல்லையே தாங்கள் பயன்படுத்துகிறோம்.

ஒன்றியம் என்பது ஒரு தவறான வார்த்தை கிடையாது. அதேபோல் இதற்கு முன்பாக கலைஞர், அண்ணா பயன்படுத்தாத வார்த்தையை தற்போது தமிழக அரசு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

1957ம் ஆண்டு திமுக-வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றியம் என்ற வார்த்தையை தாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருப்பதால் மத்திய அரசை குறிப்பிட ஒன்றியம் என்ற சொல்லைத்தான் இனி பயன்படுத்துவோம் என்று திட்டவட்டமாக கூறினார்.

இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன் பேசுகையில், இந்தியா என்ற கருத்து முன்வைக்கப்படும் போது அதில் மாநிலமும் உள்ளடங்கி இருக்கிறது. ஒன்றிணைந்து செயல்படும் சூழல் உள்ள போது ஒன்றியம் என்ற வார்த்தையை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்று வினவினார்.

இதற்கு பதிலளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிரியவில்லை. மாநிலங்கள் அனைத்தும் இணைந்து உருவாக்கியது தான் இந்தியா. ஆகவே அதன் அடிப்படையில் தான் ஒன்றியம் என்று அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே தமிழக அரசு மத்திய அரசு என்று தெரிவிக்காமல் ஒன்றிய அரசு என்று தெரிவிக்கிறது என்றார்.