ரூ.4 கோடி சிக்கிய விவகாரம்; விசாரிக்க மறுத்த ED - அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்
ரூ.4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன்
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை ஈடுபட்டனர். இதுதொடர்பாக விசாரிக்க நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில், நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த பண பறிமுதல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ராகவன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆஜராக அவகாசம்
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருதமுடியாது.
இருப்பினும், இது சம்பந்தமாக அமலாக்கத் துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதனையடுத்து விரிவான பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்த்னர்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் தேர்தல் பணி, சொந்த பணி காரணமாகவும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராகிறேன் என கடிதம் அனுப்பியுள்ளார்.