பிரபாகரனின் நட்பு கை கொடுத்ததா சீமானுக்கு - நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும் அதன் பின்னணியும்
நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வளர்ச்சியும் அதன் பின்னணியும் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
கடந்த 2009 ஆம் ஆண்டு நாம் தமிழர் இயக்கத்தை மதுரையில் தொடங்கினார். இந்த இயக்கம் அடுத்த ஆண்டு மே மாதம் அரசியல் கட்சியாக உருவானது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார். இவர் தொடர்ந்து தமிழர்களுக்காக குரல் எழுப்பி வருகிறார்.
யார் இந்த சீமான்?
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரணையூர் என்ற கிராமத்தில் 1966-ம் ஆண்டு செந்தமிழன் - அன்னம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் சீமான்.
அரணையூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார்.பின்னர் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் ஹாஜி கே.கே.இப்ராஹீம் அலி மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.
இதையடுத்து 11 முதல் 12 ஆம் வகுப்பு மேல்நிலை வகுப்பை இளையான்குடியிலும் படித்தார். பின்னர் இளையான்குடியில் உள்ள ஜாஹீர் ஹுசைன் கல்லுாரியில் இளங்கலை பொருளாதாரத்தை நிறைவு செய்தார்.
சீமானின் தந்தை தீவிரமான காங்கிரஸ் கட்சியின் தொண்டராக இருந்துள்ளார். சிறு வயது முதல் பள்ளி பருவத்தில் இருந்து திராவிடக் கொள்கையில் பிடிப்பாக இருந்துள்ளார்.
திமுக மீது அதீத பற்று கொண்ட இவர், தனது நோட்டு புத்தகங்களில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது. திராவிட இயக்க வரலாறு குறித்து தனது நண்பர்களிடம் விவாதிப்பதிலும் ஆர்வம் காட்டியுள்ளார்.
சினிமா மீது காதல்
பின்னர் சினிமா மீது ஆர்வம் கொண்டதால் சென்னை வந்த சீமான், பிரபல இயக்குநர்களாக பணியாற்றிய பாரதிராஜா, மணிவண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
இதையடுத்து முதல் படமாக பாஞ்சாலக்குறிச்சி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து “வீரநடை” எனத் தொடர்ந்து படங்களை இயக்கியுள்ளார்.
பின்னர் மாதவன் நடிப்பில் சீமான் இயக்கிய தம்பி திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று தந்தது. பின்னாளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
கருணாநிதிக்கு ஆதரவும் - எதிர்ப்பும்
இதையடுத்து திரைத்துறையில் காலுான்றி வந்த நிலையில் பெரியாரிய கொள்கைகளையும், சாதி ஒழிப்பையும் மையமாக வைத்து சீமான் தொடர்ந்து பேசி வந்தார்.
இதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியிடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். பின்னர் 2006 சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
2008 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் வடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழத் தொடங்கிய காலகட்டத்தில் பிரபாகரனை சந்தித்துப் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிரான உள்நாட்டு போரில் ஏராளமான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதற்கு எதிராக பேசத் தொடங்கினார் சீமான். எந்த வகையிலாவது புலிகள் இயக்கத்திற்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியை சந்திக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனால் திமுக மீது அதிருப்தி அடைந்த சீமான் தொடர்ந்து திமுகவிற்கு எதிராக பேசத் தொடங்கினார்.
அதிமுக-வுக்கு ஆதரவு
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதற்காக அவர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் நடைபெற்று வந்த இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்தது. இதனால் திமுக அரசுக்கு எதிராக பல கண்டன குரல்கள் எழுந்தது. இதனால் பலரும் அதிருப்தியில் இருந்து வந்தன.
இதையடுத்து நாம் தமிழர் இயக்கத்தை மதுரையில் தொடங்கினார். பின்னர் “ இலை மலர்ந்தால் ஈழம் மலரும் ” என்ற வாசகத்தையும் முன்னிலைப்படுத்தி 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர் நினைத்தது போன்று 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பிடித்தது. இதை தொடர்ந்து 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தலில் போட்டி
திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த சீமான தனது நிலைபாட்டில் இருந்து பின் வாங்கினார். எங்கள் திருநாட்டில் எங்களின் நல்லாட்சியே என்ற முழக்கத்தை முன்வைத்தார்.
தமிழகத்தை ஆளுகின்ற உரிமை எங்களுக்கு மட்டுமே என்றார். பின்னர் 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கி நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கினார்.
கடலுாரில் அதிமுக வேட்பாளர் எம்.சி சம்பத்திற்கு எதிராக போட்டியிட்ட நிலையில் தோல்வியை தழுவி 5 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். இதையடுத்து நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 1.1 ஆக இருந்தது.
உயர்ந்த வாக்கு சதவீதம்
பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தோல்வியை தழுவியது. ஆனால் வாக்கு சதவீதம் சட்டமன்ற தேர்தலை காட்டிலும் நாடாளுமன்ற தேர்தலில் 3.87 சதவீதமாக உயர்ந்தது.
பின்னர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 170க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் 7 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 3 ஆம் இடத்தை பிடித்தார்.
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சியின் முன்னேற்றத்தை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
சீமானில் பேச்சு இன்றைய இளைஞர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. இதனால் ஏராளமான இளைஞர்கள் பட்டாளம் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.
இக்கட்சியில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தமிழ் பேராசியர்கள் நிர்வாகிகளாக அங்கம் வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.