நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது!
தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்டவிரோதமாக உடைத்து கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலை பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
அப்போது, கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். அதோடு இல்லாமல் கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார்.
இது குறித்து நாகர்கோவில் போலீசாரிடம் சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நாங்குநேரி பகுதியில் வைத்து சாட்டை துரைமுருகன் போலீசார் கைது செய்தார்கள்.
பிறகு, பத்மநாபபுரம் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் முன்பு சாட்டை துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, சாட்டை துரைமுருகன் நாங்குநேரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.