ரூ.6750 கோடி கோயில் நிலங்கள் மீட்பு - அமைச்சர் சேகர்பாபு தகவல்!
ரூ.6750 கோடி கோயில் நிலங்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர், அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் 2,000-ஆவது குடமுழுக்காக இன்று நடைபெற்றது . இதில் இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு மற்றும் தருமபுர ஆதீனம் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,'' மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இன்றுடன் 2000 கோவில்களுக்குக் குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளது.
திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது என்று கூறினார். மேலும் ஆதீனங்கள் ஒருசேர இந்த ஆட்சியோடு இணக்கமாக உள்ளது . ஆனால் இது போன்று கடந்த ஆட்சியில் நடந்தது கிடையாது என்று கூறினார்.
அமைச்சர் சேகர்பாபு
தொடர்ந்து பேசியவர் ,'' பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இம்மாநாட்டைத் தடுத்து நிறுத்த பல்வேறு வகையில் பலர் போராட்டங்களைத் தூண்டப் பார்த்தனர். அனைத்தையும் மீறி உலகமே பாராட்டும் அளவிற்கு முருகன் மாநாடு நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால்தான் எதிர்க்கட்சிகள் இதனைப் பொறுத்து கொள்ளமுடியாமல் வசைபாடுகிறார்கள்.
ரூ.6750 கோடி கோயில் நிலங்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோயில் சொத்துக்கள் மீட்கும் வேலைகள் நடந்து வருவதாகக் கூறினார்.