பழனியில் ஒலிக்கும் அரோகரா கோஷம்..மாநாடு மிகப்பெரிய வெற்றி - அமைச்சர் சேகர்பாபு நெகிழ்ச்சி!
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
பழனி
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி கட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார் .மேலும் இந்த நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. 2ம் நாள் நிகழ்ச்சியில் சான்றோர்கள், ஆதினங்கள், நீதி அரசர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்புச் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ,'' தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து ஆன்மீக அன்பர்களுக்குப் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த 27 ஆம் தேதி நடந்த இந்து சமயம் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி , ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதி தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அமைச்சர் சேகர் பாபு
அந்த வகையில் இன்று நடைபெறும் மாநாட்டில் ஜப்பான், மலேசியா எனப் பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும் வெளி நாடுகளிலிருந்து 20-லிருந்து 30 ஆயிரம் பேர் வருவார்கள் என எண்ணினோம். ஆனால் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
தொடர்ந்து பேசிய அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கிற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.