தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை அறிவித்த கிராம மக்கள் - செவிசாய்க்குமா அரசு?
மீனவ கிராமத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை பகிரங்கமாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தவிக்கும் கிராம மக்கள்
திருவாரூர், முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு, முனங்காடு மீனவ கிராமத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை தான் தார் சாலை போடப்பட்டிருக்கிறது.
அதுவும் ஒருசில மாதங்களில் பழுதாகி பலமுறை கோரிக்கை மனுக்கள், புகார் மனுக்கள் அளித்தும், பலனளிக்காத நிலையில் இரண்டாவது தார் சாலை போட சொல்லியும் அதிகாரிகள் யாரும் செவி சாய்த்தபாடில்லை.
கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலால் சூறையாடப்பட்ட இந்த கிராமத்தில் கஜா புயலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சாலை புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தேர்தல் புறக்கணிப்பு
நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 5000 மீனவ குடும்பங்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். துறைமுகத்திலிருந்து மீன் முதலான பொருட்களை எடுத்து வரவும் இதுவே முதன்மை சாலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சமவாரியாக பிரித்துக் கொடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,
இதுவரை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அந்த ஊருக்கு பெயரளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடற்கரை கிராமம் என்பதால் நிலத்தடி நீரை எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் குடிக்க தண்ணீரும், போய்வர நல்ல சாலையும் கேட்டு போராடும் கிராம மக்கள் ஒரு வேட்பாளரையும் கிராமத்திற்குள் அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து, நாளை நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்து, தேர்தல் முடிவை முன்பே அச்சிட்டு பதாகைகளில் ஊரின் முன்புறம் வைத்து விட்டனர். இதனையறிந்த வட்டாட்சியர், காவல் உயர் அதிகாரிகளுடன் அங்கு சென்று கிராம மக்களை மிரட்டி அங்கு வைக்கப்பட்டுள்ள பதாகைகளை
கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை கொண்டு அகற்றி விட்டு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது, தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை மக்கள் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.