வங்கதேச அரசின் புதிய தலைவர் - யார் இந்த முகமது யூனுஸ்?
வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்கவுள்ளார்.
வங்கதேச விவகாரம்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பதவி விலகியுள்ளார். தொடர்ந்து, இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைகழத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வங்கிக் கடன்களுக்குத் தகுதி பெறாத தொழில்முனைவோருக்கு சிறு கடன்களை வழங்க திட்டம் வகுத்தார். 1983ல் கிராம வங்கி என பொருள்படும் கிராமீன் பேங்க் தொடங்கப்பட்டது.
இதில், மகளிர் சுய உதவிக் குழுவைப் போன்று செயல்பட்டு பல கோடி பேர் கடன் பெற்று பயனடைந்தனர். இந்திய மதிப்பில் சுமார் ரூ.8000 அளவிலான கடன்களை 9 கோடி ஏழைகளுக்கு வழங்கியுள்ளது. இந்த மாடலை 100 நாடுகள் பின்பற்றுகின்றன. 2006ல் யூனுஸ் மற்றும் கிராமீன் பேங்க்-கிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
முகமது யூனுஸ்
இவரது கிராமீன் டெலிகாம் நிறுவனத்தின் பங்களிப்பு மூலம் 1997 முதல் 2007ஆம் ஆண்டிற்குள் 50 ஆயிரம் கிராமங்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேரின் கைகளில் செல்போனை கொண்டு சேர்த்தார். இதற்கிடையில், தனது தொலைத்தொடர்பு நிறுவனத்தில் 18 கோடி ரூபாயை கையாடல் செய்த புகாரில் இவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி, தொழிலாளர் சட்டத்தை மீறியதாக 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் ஆலோசகராகவும், தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் எதிரியாக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.