வங்கதேச கலவரம் ; ஹோட்டலில் 24 பேர் உயிரோடு எரித்து கொலை
வங்கதேசத்தில் ஒரு ஹோட்டலுக்கு தீ வைக்கப்பட்டதில் 24 பேர் எரித்து கொல்லப்பட்டுள்ளனர்.
வங்கதேச கலவரம்
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிரான மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்துள்ளது. போராட்டக்காரர்கள் அவரது அதிகார பூர்வ இல்லத்தை கைப்பற்றியதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் தப்பி இந்தியா வந்துள்ளார்.
தற்போது அந்நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சி தற்போது அமலில் உள்ள நிலையில் புதிய இடைக்கால அரசு அமைக்கும் முயற்சியில் வங்கதேச ராணுவம் இறங்கியுள்ளது.
24 பேர் பலி
ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில் வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் சிலைகள் உடைக்கப்பட்டு வருகிறது. அவாமி கட்சியின் அலுவலங்கங்கள், தலைவர்களின் வீடுகள், வணிக வளாகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்தியாவுக்கு சொந்தமான இந்திரா காந்தி கலாசார மையமும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளது.
தற்போது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பொதுச் செயலாளர் ஷாஹின் சக்லதார் என்பவருக்கு சொந்தமான 'ஜூபைர்' என்ற நட்சத்திர ஹோட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் மொத்தமாக 24 பேர் எரித்துக் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோர் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தரைத்தளத்தில் வைக்கப்பட்ட தீ வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது.