எம்எஸ் தோனியின் ஜெர்ஸி 'நம்பர் 7' இனி இல்லையா..? பி.சி.சி.ஐ எடுத்த அதிரடி முடிவு!
எம்எஸ் தோனி கிரிக்கெட்டுக்கு செய்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரின் ஜெர்ஸி நம்பர் 7க்கு பி.சி.சி.ஐ ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எஸ் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. 2007ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை, 2011ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.
இதனால் மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்த ஒரே இந்திய கேப்டனாக எம்எஸ் தோனி இருக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஆனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை அணியின் கேப்டனாகவும் இருந்து வரும் தோனி, இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
ஜெர்ஸி நம்பர் 7
எம்எஸ் தோனியை போலவே அவரின் ஜெர்ஸியில் இருக்கும் 7 என்ற எண்ணும் மிகவும் பிரபலம். இதுவரை அந்த எண் கொண்ட ஜெர்ஸியை மட்டுமே அணிந்து அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் எம்எஸ் தோனி கிரிக்கெட்டுக்கு செய்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரின் ஜெர்ஸி நம்பர் 7க்கு பி.சி.சி.ஐ ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஜெர்ஸி '7' ஐ இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவரின் 10ம் நம்பர் ஜெர்ஸிக்கு பி.சி.சி.ஐ. ஓய்வு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.