சிறுவர்களை தலைகீழாகத் தொங்க விட்டு, அடித்து சித்ரவதை -மக்கள் செய்த கொடூரம்!
திருடர்கள் என நினைத்து சிறுவர்களை தலைகீழாகத் தொங்க விட்டு, அடித்து சித்ரவதை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுவர்கள்
மத்தியப்பிரதேச மாநிலம் பந்தூர்னா மாவட்டத்தில் சிறுவர்களை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் பிடித்து, தலைகீழாகத் தொங்க விட்டு, அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் அந்த சிறுவன் கைக்கடிகாரம் மற்றும் பிற பொருட்களைத் திருடி விட்டதாகக் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து மற்றொரு சிறுவனைக் கயிற்றால் கட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தன.
அதுமட்டுமில்லாமல் சிறுவர்களின் கைகளைக் கயிற்றால் கட்டியதுடன், அவர்களின் தலையருகே சூடான நிலக்கரியை வைத்து, அதில் மிளகாயைப் போட்டு புகையைச் சுவாசிக்க வைத்து கொடுமை செய்துள்ளனர்.
சித்ரவதை
இதனால், வழி தாங்க முடியாத சிறுவர்கள் சத்தம் போட்டு அலறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மத்தியப்பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் கண்டனம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.