சந்தீப் கோஷுக்கு முதல்வர் மம்தா ஆதரவா? ராஜினாமா செய்யும் முடிவில் அதிருப்தி எம்.பி!
மாநில அரசின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்து, திரிணமுல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜவஹர் சர்கார் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவர்கள் ,அரசியல் கட்சித் தலைவர்கள் நீதி கேட்டு சாலையில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறை கைது செய்துள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டியும், வழக்கில் நீதி கோரியும் கொல்கத்தாவில் மருத்துவர்கள் இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் முதல்வர் மம்தா பானர்ஜிக்குக்கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் ஆர்.ஜி.கர்.,மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு ஆதரவாக முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படுவதாகச் சொந்தக் கட்சியிலேயே குற்றச்சாட்டுக்கள் கிளம்பின.
ராஜினாமா
இதனையடுத்து மம்தா பானர்ஜிக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கும் விதமாக, திரிணமுல் கட்சி மாநிலங்களவை எம்.பி., ஜவஹர் சர்கார் மாநில அரசின் செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்து பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் செப்.,11 டில்லி சென்று மாநிலங்களவை சபாநாயகரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.