கங்கைகொண்ட சோழபுரத்தில் காலடி பதித்த முதல் பிரதமர் - பாரம்பரிய உடையில் மோடி!
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் மோடி தரிசனம் செய்தார்.
கங்கைகொண்ட சோழபுரம்
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்தார்.
பின் ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து அங்கிருந்து திருச்சி வந்த அவர் நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
மோடி தரிசனம்
அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்திருந்தார். இதனையடுத்து கங்கை கொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடி கங்கையில் இருந்து கொண்டு வந்த புனித நீர் மூலம் சோழீஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். அந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் குறித்த தகவலை அதிகாரிகள் அவரிடம் விளக்கிக் கூறினார்கள்.