நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி - கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்பல் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.
கப்பல்
நாகையில் இருந்து இலங்கைக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கியது, இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி துறை மற்றும் ஆயுஷ் துறைக்கான மந்திரி சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டு, கோடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார் அதில், "இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே தூதரக மற்றும் பொருளாதார உறவுகளில் நாம் புதிய அத்தியாயம் ஒன்றை தொடங்கியிருக்கிறோம்.
நம்முடைய உறவுகளை வலுப்படுத்துவதில் நாகை மற்றும் காங்கேசன்துறை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடக்கம் ஒரு முக்கியம் வாய்ந்த மைல்கல்லாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும், கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தில் ஒரு ஆழ்ந்த வரலாற்றை பகிர்ந்து வருகிறது" என்று கூறினார்.
கட்டண விபரம்
இந்நிலையில், நாகையிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்ல ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இலங்கை செல்லும் பயணிகளுக்கு டிக்கெட் விலை ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து நாகைக்கு ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 150 பயணிகள் வரை பயணம் மேற்கொள்ளும் வசதியுள்ள இந்த கப்பலில் இன்று 50 பயணிகள் இலங்கைக்குப் புறப்பட்டனர். இந்த கப்பல் 3.30 மணி நேரத்தில் சென்றடையும்.