பங்காரு அடிகளார் மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பங்காரு அடிகள்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை வைத்து அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் நடத்தி வந்தார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர்.
மேலும், மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தியும் ஆன்மீகப் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். இவரது ஆன்மீகச் சேவையைப் பாராட்டி, கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.
முதல்வர் அஞ்சலி
இந்நிலையில், இவர் ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார், கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் நேற்று மாரடைப்பால் உயிர் பிரிந்துள்ளார். இவரது இறுதி சடங்கு அரசு மரியாதை உடன் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்புக்காக 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.