சரஸ்வதி பூஜை.. சாமி படம், சிலைக்கு அனுமதியில்லையா? - மருத்துவமனை டீன் விளக்கம்!
ஆயுத பூஜையில் சாமி படம் சிலை வைக்க அனுமதியில்லை என்ற டீனின் சுற்றறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றறிக்கை
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆயுத பூஜை, விஜயதசமி அன்று பூஜை செய்யும் நிகழ்வுகளில் எந்த மதத்தை சார்ந்த சாமி படமோ அல்லது சிலை வடிவமோ வைத்திருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வைத்திருந்தால் அதனை எதிர்கால பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று அதில் கூறியுள்ள அவர், மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி இந்த சுற்றறிக்கையை வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டீன் விளக்கம்
இந்நிலையில், இந்த சுற்றறிக்கை குறித்து மருத்துவ கல்லூரி டீன் விளக்கம் அளித்துள்ளார். அதில், திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மூலம் எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை. தவறான செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
ஆயுத பூஜை, விஜயதசமி அன்று பூஜை செய்யும் நிகழ்வுகளில் எந்த மதத்தை சார்ந்த சாமி படமோ அல்லது சிலை வடிவமோ வைத்திருக்கக் கூடாது என்று தெரிவித்தது முற்றிலும் பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார்.