அழகிப்போட்டியில் வென்ற 60 வயது பெண் - சாதனை படைத்த அர்ஜெண்டினா அழகி!
பிரபஞ்ச அழகிப்போட்டியில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் மகுடம் சூடியுள்ளார்
பிரபஞ்ச அழகிப்போட்டி
உலக அளவில் ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகிப்போட்டி (மிஸ் யூனிவர்ஸ்) நடந்து வருகிறது. இதில் 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது.
இதனிடையே கடந்த ஆண்டு இந்த வயது வரம்பை பிரபஞ்ச அழகிப்போட்டி அமைப்பு நீக்கியது. இதனால் இந்த போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாரும் பங்கேற்க முடியும். இந்நிலையில் அர்ஜென்டினாவின் பியூனோஸ் அர்ஸ் மாகாணத்துக்கான பிரபஞ்ச அழகிப்போட்டி நடந்தது.
60 வயது பெண்
இதில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண் மகுடம் சூடியுள்ளார். அடுத்த மாதம் அர்ஜென்டினாவின் தேசிய அளவிலான பிரபஞ்ச அழகிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் பியூனோஸ் அர்ஸ் மாகாணம் சார்பில் அலஜாண்டிரா பங்கேற்கிறார்.
இதில் அவர் வெற்றிபெற்றால் செப்டம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப்போட்டியில் அர்ஜென்டினா சார்பில் பங்கேற்பார். அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் வழக்கறிஞராக வேலை செய்துவருகிறார். மேலும், அவர் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.