கொளுத்தும் கோடை வெயில்; மன்சூர் வீட்டில் மட்டும் தினமும் மழை - அதெப்படி..?
கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வரும் நிலையில் ஒருவரது வீட்டில் மட்டும் தினமும் மழை பெய்கிறது.
செயற்கை மழை
கேரளாவில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பகல் நேரத்தில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது வருகிறது. ஆனால் ஒருவரது வீட்டில் மட்டும் தினமும் மழை பெய்கிறது. அதற்காக செயற்கை மழை பெய்வதற்கான அமைப்பை அவர் தனது வீட்டில் ஏற்படுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வாணியம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர். கோடைக்காலத்தில் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு இவரது வீட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது.
அப்போது மோட்டார் மற்றும் பைப்புகளை பயன்படுத்தி செயற்கை மழை பெய்யச் செய்து குளிர்விக்கும் யோசனை அவருக்கு வந்துள்ளது. இதனையடுத்து 300 வாட் அரை எச்.பி. மோட்டார், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் 5 ஸ்பிரிங்ளர்கள், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார்.
எப்போதும் குளிர்ச்சி
பின்னர் வீட்டின் மேற்கூரை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பைப்புகளை அமைத்து அதில் ஸ்பிரிங்ளர்களை பொருத்தியுள்ளார். பின்னர் எச்.பி. மோட்டார் மூலம் மொட்டை மாடியிலிருக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து ஸ்பிரிங்லர்கள் பொருத்தப்பட்டுள்ள குழாய்களுக்கு தண்ணீர் சப்ளை கொடுத்துள்ளார்.
மோட்டார் ஆன் செய்யும்போது இந்த ஸ்பிரிங்லர்கள் வீட்டில் மேலிருந்து சுற்றிக்கொண்டே அனைத்து பகுதிகளுக்கு தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறது. இதனால் வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளும் ஈரமாகிறது.
அதேபோல் வீட்டில் உள்ள மரங்களின் கிளைகளில் தண்ணீர் பட்டு கீழே விழும்போது மழை பெய்ததை போன்ற சூழலை உருவாக்குகிறது. இதனால் மன்சூரின் வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதியில் வெப்பம் முழுவதுமாக தணிந்து குளிர்ச்சியாகி விடுகிறது. கோடைக்காலத்தில் அவரின் வீடு மழைக்காலம் போன்று இருக்கிறது.