கேப்டன் மீட்டிங்கிற்கு மறுப்பு; தோனியின் கடைசி ஐபிஎல் இதுதான்? போட்டுடைத்த கோச்!
எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பேசியுள்ளார்.
எம்.எஸ்.தோனி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். இவர் தலைமையிலான சென்னை அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி, அதில் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
மேலும், கடந்த சீசன் வரை சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட எம்.எஸ்.தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எம்.எஸ்.தோனி குறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பேசியுள்ளார். அவர் கூறியதாவது "தோனி எப்போது ஓய்வு பெறப்போகிறார் என்று ரகசியமாக வைத்திருக்கிறார்.
2 ஆண்டுகள்
நிச்சயமாக விரைவில் அறிவிக்க மாட்டார். தோனி இன்னும் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். பந்துகளை நன்றாக அடிக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் அடுத்த 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறேன்.
ஆனால், அவர் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு திடீரென்று கேப்டன் உடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தோனி பங்கேற்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அப்போதுதான் ருதுராஜ் புதிய கேப்டனாக வரப்போகிறார் என்பது தெரிந்தது.
ருதுராஜ் நல்ல கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தோனியை பொருத்தவரை தாம் விளையாடும் போதே அடுத்த ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று நினைக்கின்றார்" என மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.