200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில்...முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு!
மெக்சிகோ நாட்டில் முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதல் பெண் அதிபர்
மெக்சிகோ நாட்டில் நேற்று பொது தேர்வு நடைபெற்று முடிந்தது. பிரதிநிதிகள் சபையின் 500 உறுப்பினர்கள், குடியரசு செனட் சபையின் 128 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவுகள் முடிந்ததும் வாக்குகள் எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதிபர் தேர்தலில் கிளாடியாவை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு பெண் வேட்பாளர் கால்வெஸ் (தேசிய செயல் கட்சி) 28.25 சதவீத வாக்குகள் பெற்று இரண்டம் இடத்தை பிடித்தார். மத்திய இடதுசாரி கட்சியான எம்.சி. கட்சியின் வேட்பாளர் ஜார்ஜ் ஆலவரஸ் மேனஸ் 10.5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று பின்தங்கினார்.
கிளாடியா ஷீன்பாம்
இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார். அவர் 58.75 சதவீத வாக்குகள் பெற்றார். இதன்மூலம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதனையடுத்து, 61 வயதான கிளாடியா ஷீன்பாம் வரும் டிசம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே மெக்சிகோ நகர மேயாராக பணியாற்றியுள்ள கிளாடியா ஷீன்பாம் காலநிலை விஞ்ஞானி மற்றும் மெக்சிகோ தேச அரசியலில் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வற்றி குறித்து பேசிய கிளாடியா ஷீன்பாம், ‘நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர் ஆவதில் எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். தாய்மார்களுக்கான வெற்றி. இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக நாடு என்பதை நாம் நிரூபித்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.