பேறுகால விடுப்பை பணிக்காலமாக கருத முடியாது - உயர்நீதிமன்றம்
மகப்பேறு விடுப்பு எடுத்தால் பணியில் இருந்ததாகக் கருத முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு
துணை வட்டாட்சியர் எஸ்.நாகஜோதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசு பணியில் உதவியாளராக சேர்ந்து துணை தாசில்தாராக கடந்த 2019-ம் ஆண்டு பதவிஉயர்வு பெற்றேன்.
இதன்பின்னர் 2 ஆண்டுகள் எனக்கு நன்னடத்தைகாலமாகும். இந்த நன்னடத்தை காலத்தில் 9 மாதங்கள் மகப்பேறுகால விடுப்பு எடுத்தேன். நன்னடத்தை காலம் 2021 ஏப். 6-ம் தேதிமுடிவடைந்தது.
நீதிபதி உத்தரவு
இதன்பின்னர், சென்னை ஆட்சியர் தயாரித்த பணி மூப்பு பட்டியலில் என்பெயர் இடம் பெறவில்லை. மகப்பேறு கால விடுப்பை அவர் பணியில் இருந்ததாக கருதாமல் பட்டியல் தயாரித்துள்ளார். இதனால், என்னைவிட இளநிலை நிலையில் உள்ளவர்கள் தாசில்தாராக பதவிஉயர்வு பெற்று விட்டனர். எனவே,ஆட்சியர் தயாரித்த பணி மூப்பு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், நன்னடத்தை காலத்தில் அரசு ஊழியர் விடுப்புஎடுத்தால் அந்த நன்னடத்தை காலத்தில் பணியில் இருந்ததாக கருத முடியாது. நன்னடத்தை காலம் என்பது வெறும் சம்பிரதாயமாக பார்க்க முடியாது. அந்த காலத்தில், பல்வேறு தேர்வுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால்மட்டுமே, அவர்களுக்கு பதவி உயர்வு உறுதி செய்து, நிரந்தரமாக்கப்படும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.