மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு இன்று நடைபெறவில்லை - என்ன காரணம்?
மன்மோகன் சிங்கின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மன்மோகன் சிங் மறைவு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன்(92) உடல்நிலை மோசமடைந்ததையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இறுதிச்சடங்கு
இதனையொட்டி டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை நாடு முழுவதும் ஏழு நாள் தேசிய இரங்கல் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்குகள் டிசம்பர் 28, சனிக்கிழமை, முழுமையான அரசு மரியாதையுடன் நடைபெறுமென காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
அவர்களின் மகள் அமெரிக்காவில் வசித்து வருவதால், அவரின் வருகைக்காக சடங்குகள் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை காலை 8 மணிக்கு அவரது உடல் காங்கிரஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்படும்.
அங்கு காலை 8:30 முதல் 9:30 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர், அவரது உடல் சடங்குக்காக ஊர்வலமாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.