தும்மலை அடக்கியதால் நேர்ந்த சோகம்; இப்படி கூடவா நடக்கும்..? மருத்துவர்கள் அதிர்ச்சி!
நபர் ஒருவர் சளியால் ஏற்பட்ட தும்மலை கட்டுப்படுத்தியபோது, அவரின் சுவாசக் குழாய் கிழிந்து சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தும்மல்
இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் காரை ஒட்டிச் சென்றபோது திடீரென தும்மல் வந்துள்ளது. காரை ஓட்டிச் செல்வதால் தும்முவதற்கு சங்கடப்பட்ட அவர் மூக்கை அழுத்தி வாயையும் இறுக்கமாக மூடி அதை கட்டுப்படுத்தியுள்ளார்.
இதனால் திடீரென அவரின் கழுத்துப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு வலி எடுத்துள்ளது. உடனடியாக அந்த நபர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரின் வீக்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பகுதியில் மெல்லிய சத்தம் வருவதை கவனித்தனர். மேலும், அவரின் மூச்சுக்குழாய் சேதமடைந்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு வலி நிவாரணம் மற்றும் அலர்ஜிக்கான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. 2 வாரங்களுக்கு கடுமையான வேலைகளைத் தவிர்க்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
மூச்சுப்பாதை சேதம்
5 வாரங்களுக்குப் பிறகு ஸ்கேன் செய்து பார்த்ததில், அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குணமாகியிருந்தது. அவர் தும்மலை அடக்கியதால் அளவுக்கு அதிகமான அழுத்தம் மூச்சுப்பாதையில் ஏற்பட்டு, இயல்பான வேகத்தைவிட 20 மடங்கு கடுமையான தும்மல் ஏற்பட்டுள்ளது.
அந்த அழுத்தம் மூச்சுக்குழாயில் 2க்கு 2 மி.மீ அளவுள்ள துளையை ஏற்படுத்தியது. அதாவது மூச்சுப்பாதை கிழிந்து சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவ உலகை அதிரவைத்துள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவம் மருத்துவ வரலாற்றில் முதன்முறை என்றும் கூறப்படுகிறது. எனவே தும்மல் வரும்போது அதனை கட்டுப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.