தண்ணிய குடிங்க..! இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் 300 கற்கள் - டீ தான் காரணமா..?
இளம்பெண் ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து சுமார் 300 கற்களை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்
சிறுநீர் கற்கள்
தைவான் நாட்டை சேர்ந்த சியோ யு (20) என்ற இளம்பெண்ணுக்கு கடுமையான ஜுரமும், இடுப்புக்கு கீழே தாங்க முடியாத வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பலவிதமான பரிசோதனைகள் மேற்கொண்டதில், அந்த பெண்ணின் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மேலும், சிடி ஸ்கேனில் 5 மி.மீ. முதல் 2 செ.மீ. அளவிலான கற்கள் இருப்பதும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் சியோ யு-வின் சிறுநீரகத்திலிருந்த 300 கற்கள் அகற்றப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்த பெண் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தண்ணிய குடிங்க!
சியோவுக்கு தண்ணீர் குடிக்கப் பிடிக்காததால், அதற்கு பதிலாக பபிள் டீ (Bubble Tea) எனும் பிரபல தைவான் டீயை அதிகம் குடித்ததே சிறுநீரகத்தில் கற்கள் உருவானதற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடைக்காலம் மற்றும் வசந்த காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பு காரணமாக சிறுநீரக கற்கள் ஏற்படும். குறைந்த அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாததன் விளைவாக சிறுநீர் அதிகளவு செறிவூட்டப்படுகிறது.
இதனால் தாதுக்கள் ஒன்றிணைந்து கற்களாக மாறுகின்றன. எனவே, எந்த உடல்நலக் குறைவின் போதும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் அந்த பிரச்சனைகளை பெருமளவு நம்மால் தவிர்க்க முடியும். அனைவரும் தினமும் தேவையான அளவு தண்ணீரை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.