மக்களே உஷார்.. தவறவிடும் ATM கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடி - வங்கி ஊழியர் கைது!
தவறவிடும் ATM கார்டுகளை பயன்படுத்தி நூதன மோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நூதன மோசடி
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வேந்தன். இவர் தனது வங்கி ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும், தனது வங்கிக் கணக்கிலிருந்து 3 தவணைகளாக ரூ.12,000 எடுக்கப்பட்டுள்ளதாகவும் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஸ்ரீவாசலு ரெட்டி (27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் அம்மாநிலத்தில் உள்ள தனியார் வாங்கி ஒன்றில் டேட்டா ஆப்ரேட்டராக ஒரு வருடம் பணியாற்றி வந்துள்ளார்.
வைஃபை கார்டுகள்
அப்போது ஏடிஎம் கார்டுகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்றும் அதிலிருந்து எப்படி பணம் எடுப்பது போன்ற நுணுக்கங்களை கற்றுக்கொண்டுள்ளார். பின்னர் வாங்கி வேலையை விட்டுவிட்டு ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் தவறவிடும் கார்டுகள் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
வைஃபை கார்டுகளை மட்டுமே குறிவைத்து திருடும் அவர், அதனை ஸ்வைப் மெஷின் இல்லாமல் டேப் செய்து பணத்தை சுருட்டி சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஸ்ரீவாசலு ரெட்டியிடம் இருந்து 63 வைஃபை ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.