ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா..? இனிமேல் இது கட்டாயம் - நீதிமன்றம் அதிரடி!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் விசாரணை
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர்.
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தாக்கல் செய்த அறிக்கையில் "ஊட்டிக்கு தினமும், 1,300 வேன்கள் உள்பட 20,000 வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் "இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும். உள்ளூர் மக்கள் நடமாட இயலாது.
இ-பாஸ் நடைமுறை
சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும். ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை, இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், கொரோனா காலத்தில் நடைமுறையில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும். இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும். இதிலிருந்து உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும். இ-பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.