இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம்.. இந்த மண்ணில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரியுமா?
தென்னிந்தியாவில் மிக முக்கியமான நீலகிரி மாவட்டத்தில் பிறந்த பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
அக்கம்மா
தேவி 1918ம் ஆண்டு செப்டெம்பர் 5ல் நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிறந்தார். படுகர் இனத்தைச் சேர்ந்த மோதா கவுடர்-சுப்பி தம்பதியின் ஏழு குழந்தைகளில் 2வதாக பிறந்தவர் இவர். படுகர் இன மக்களிலேயே முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றவர் அக்கம்மா தேவி.அவர் கல்லூரி பயின்றது இரண்டாம் உலகப்போர் சமயம். பின்னர் 1953 ஆம் ஆண்டு சரோஜினி வரதப்பன் அழைத்ததன்பேரில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அவரை 1962ல் நீலகிரியில் வேட்பாளராக முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் நிறுத்தினார். வெற்றி பெற்ற பிறகு ,தேயிலைத் தொழிற்சாலைகள்,முதல் மகளிர் கல்லூரி உள்ளிட்டவற்றை தன் தொகுதிக்கு கொண்டு வந்தார். எம்பியாக இருந்த காலகட்டத்தில் மத்திய அரசின் பொதுக்கணக்கு குழுவில் இடம்பெற்ற ஒரே பெண் அக்கம்மா தேவிதான். இறுதியாக கடந்த 2012ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டதன் காரணமாக தனது 94 வயதில் இறந்தார்.
க ராமச்சந்திரன்
இவர் 1951ம் ஆகஸ்ட் 9ம் தேதி ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிறந்தார். இவர் அரசியல்வாதி ஆவார். இவர் 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தமிழக சட்டமன்றத்துக்கு தி.மு.க. சார்பில் கூடலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தமிழ்நாடு காதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
பின்னர் 2011ம் ஆண்டு குன்னூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குன்னூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7ல் தமிழக வனத்துறை அமைச்சசராக பதவியேற்றார். தற்போது தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.
லீலா சாம்சன்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1951ம் ஆண்டு பிறந்தார் லீலா சாம்சன். இவர் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நடன வடிவமைப்பாளர், பயிற்சியாளர்,எழுத்தாளர் மற்றும் நடிகை ஆவார். கலையில் இளங்கலைப் பட்டம் பெற்றபின்னர் கலாசேத்திராவில் பரதநாட்டியம் பயின்றார்.
தனது கலைநுட்பத்திறனுக்கு பெயர்பெற்ற லீலா தில்லியில் உள்ள ஸ்ரீராம் பரதநாட்டிய பலா கேந்திரத்தில் பல ஆண்டுகள் கற்பித்து வந்தார். இவர் கலை துறையில் பத்மஸ்ரீ விருது (1990), தமிழ்நாடு அரசின் நிருத்திய சூடாமணி, கலைமாமணி (2005), சங்கீத நாடக அகாதமி விருது, (1999–2000), நாட்டிய கலா ஆச்சார்யா விருதினை பெற்றுள்ளார்.
சிஎஸ் சபீத்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் கையுன்னி என்ற இடத்தில் 1990ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பிறந்தார். இவர் ஒரு இந்திய கால்பந்து வீரர் ஆவார். 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஒரு முன்கள வீரராக விளையாடிய சபீத், 2006 இல், அவர் உள்ளூர் லீக்கில் வெற்றியாளர்களாக இருந்த தனது அணிக்காக அதிக கோல்களை அடித்தார். ஈரானில் நடந்த 2008 ஆசிய கால்பந்து சம்மேளன இளைஞர் சாம்பியன் பட்ட தகுதி சுற்றில் இந்திய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.
அங்கு 5 போட்டிகளில் விளையாடி பாகிஸ்தான் எதிராக ஒரு கோலை அடித்தார். U19 தமிழ்நாடு அணியில் விளையாடியுள்ளார். 2009 ஆம் ஆண்டு லீக் 2வது பிரிவில், விவா கேரளாவின் முன்னேற்றத்தில் சபீத் ஒரு முக்கிய பங்கு வகித்தார். 2014 இந்திய சூப்பர் லீக்கில் கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்காக விளையாடினார். 2015 ல் இந்திய சூப்பர் லீக்கில் எப்சி கோவாவுக்காக விளையாடினார். 25 மார்ச் 2011 அன்று, துருக்மெனிஸ்தான்னுக்கு எதிராக சபீது தேசிய அளவில் அறிமுகமானார். மேலும் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப் போட்டியில் மியான்மார் U-23க்கு எதிரான இந்திய U-23 கால்பந்து அணிக்கு தனது முதல் கோலை அடித்தார் சிஎஸ் சபீத்.
சாய் பல்லவி
இவர் ஒரு திரைப்பட நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். சாய் பல்லவி செந்தாமரை என்ற முழுப்பெயர் கொண்ட இவர் 1992ம் ஆண்டு மே 9ம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்தார். இவர் படுகர் இனத்தை சேர்ந்தவர். தனது பள்ளி படிப்பை கோயம்பத்தூரில் பயின்றார். மற்றும் தனது மருத்துவ படிப்பை ஜியார்ஜியா நாட்டில் 'திபிலீசி அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில்' முடித்தார்.
இவர், 2008-ம் ஆண்டு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக 2008-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த தாம் தூம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு 2015-ஆம் ஆண்டு வெளியாகி தென்னிந்திய மொழி திரைப்படங்களுள் பெரும் வெற்றி பெற்ற “பிரேமம்” திரைப்படம் மூலம் நிவின் பாலிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக அறிமுகமான சாய்பல்லவிக்கு ரசிகர் பட்டாளம் குவிந்தது. மேலும் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்திருந்தார். இதுவரை 14 படங்களில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
கார்த்திகி கோன்சால்வெசு
இவர் ஒரு ஆவணப்பட தயாரிப்பாளர் மற்றும் புகைப்பட கலைஞர் ஆவார். 1986ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிறந்தார். நியூயார்க்கின் பிங்காம்டனைச் சேர்ந்த திமோதி ஏ. கோன்சால்வெசு மற்றும் பிரிசில்லா டேப்லி கோன்சால்வ்சின் ஆகியோரின் இளைய மகள் ஆவார் கார்த்திகி. கோன்சால்வெசு கோயம்புத்தூரில் உள்ள டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரியில் பயின்றார்.
இவர் அனிமல் பிளானட் மற்றும் டிஸ்கவரி தொலைக்காட்சியில் படக்கருவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து. கடந்த 2022ம் ஆண்டு 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற என்ற ஆவணப்படத்தின் இயக்கினார். இந்த ஆவணப்படமானது கடந்த மார்ச் 13ம் தேதி 2023ம் ஆண்டு 95வது ஆஸ்கர் விருதுகளில், சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை பெற்றது. இப்பிரிவில் இந்த விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும்.
வாணி போஜன்
இவர் ஒரு மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகை ஆவார். 1988ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி நீலகிரி மாவட்டம் உதகையில் பிறந்தார். இவர் ஒரு படுகர் இனத்தை சேர்ந்தவர். கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் .
விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஆஹா" சீரியல் மூலமாகா சின்னத்திரையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் பிரபலமும் அடைந்தார். சத்யா கேரக்டரில் ஏறக்குறைய 5 ஆண்டுகள் அவர் ரசிகர்களை கட்டிப் போட்டிருந்தார். மேலும் 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம்' சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வாணி போஜன் 'ட்ரிப்பிள்ஸ் வெப்சீரிஸை' தொடர்ந்து 'செங்களம்' வெப்சீரிஸில் நடித்துள்ளார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.