தாண்டவமாடும் நிபா வைரஸ்; இளைஞர் மரணம் - கல்லூரிகள், தியேட்டர்கள் மூடல்!
24 வயது இளைஞர் நிபா வைரஸ் பாதித்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிபா வைரஸ்
கேரளா, மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மூளைக் காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்தார்.
அவரது சாம்பிள்கள் புனே வைராலஜி ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைகப்பட்டது. அங்கு ஆய்வு செய்ததில் நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதிச் செய்யப்பட்டது. தொடர்ந்து உயர் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, விதிமுறைகள் படி 16 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 151 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு சில அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அவர்களின் சாம்பிள்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வைரஸ் பரவல் தடுக்க இன்று (செப்.,16) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும்.
பொதுமக்கள் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
'தற்போது கவலைப்பட ஒன்றுமில்லை. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.