அழுவதா... சிரிப்பதா... மக்கள் குரலை மத்திய அரசு கேட்பதில்லை... - டெல்லியில் ப.சிதம்பரம் பேட்டி
மக்கள் குரலை மத்திய அரசு செவி சாய்த்து கேட்பதில்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.
கருப்பு உடை அணிந்து போராட்டம்
நாடாளுமன்றத்தில், ராகுல் காந்தி தலைமையில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் எம்.பி.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசு தலைவர் மாளிகை நோக்கி காங்கிரசார் பேரணியாக சென்றனர்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது
பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி செல்ல முயற்சி செய்தபோது, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் ஏராளமானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி போராட்டம் நாடாளுமன்ற உள்ளேயும், வெளியேயும் நடந்து கொண்டிருக்கிறது. 144 தடை போடப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தலைவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க டெல்லி போலீசார் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ப.சிதம்பரம் பரபரப்பு பேட்டி
இந்நிலையில், விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ப.சிதம்பரத்தை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசியதாவது -
செவி இருந்தாதானே செவி சாய்க்க முடியும். மக்கள் துன்பப்படுகிறார்கள் என்பதை மத்திய அரசு மறுக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் லோக் சபையில் பேசிய மத்திய நிதியமைச்சர் அவர்கள், ஜிஎஸ்டி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்கிறார்.
இந்த மாதிரி சொன்னால்... அழுவதா, சிரிப்பதா என்பது தெரியல.. மக்கள் பாதிக்கப்படவில்லையா?, பெட்ரோல் விலை, டீசல் விலை, சமையல்-கேஸ் விலை, எண்ணெய் விலை, பால் விலை இந்த விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லையா? பென்சில், ரப்பர், நோட்டு புத்தகம் இதன் மேல் ஜிஎஸ்டி போட்டால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
நிதியமைச்சர் வரலாறு பற்றி பேசுகிறார்களே தவிர, பொருளாதாரத்தைப் பற்றி பேசவில்லை. அவர் வரலாறு ஆசிரியராக இருந்திருக்க வேண்டும். பொருளாதார நிதியமைச்சராக இருந்திருக்கக் கூடாது. என்ன நடைமுறையென்று தெரியவில்லை.
மக்கள் நாள்தோறும் பாதிக்கப்படுகிறார்கள். மக்களுடைய சேமிப்பு குறைந்திருக்கிறது. மக்களிடையே வேலையின்மை அதிகரிக்கிறது இதையெல்லாம் பார்த்துவிட்டு மக்கள் பாதிக்கப்படவில்லையென்றால் என்ன செய்வது?
நாங்கள் போராடிதான் ஆக வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களுடைய துயரங்கள், சுமைகளை எடுத்து சொல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இருக்கிறது. எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். கைது செய்தால் செய்யட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.