விவாகரத்து : பெண் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை!
விவாகரத்துக்குப் பின் திருமணத்தின் போது பெண் குடும்பத்தார் கொடுத்த சீதனத்தை உரிமை கொண்டாடக் கணவர் வீட்டாருக்கு உரிமை இல்லை என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குடும்பப் பிரச்சினை
பெங்களூரைச் சேர்ந்த தம்பதி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அதே நேரத்தில் அந்த பெண்ணுக்கு, ஜீவனாம்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த பெண் தனது திருமணத்தின் போது, கணவர் வீட்டாருக்கு சீதனமாக ரூ.9 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் ஆகியவை கொடுத்ததாகத் தெரிகிறது.
விவாகரத்து
இதனைப் பெண் வீட்டார்கள் திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் திருமணத்தின் போது கொடுத்த நகை, பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது என்றும், அது தங்களுக்குத் தான் சொந்தம் என்றும்
அந்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண், பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கர்நாடக உயர் நீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, விவாகரத்து பெற்ற பின்பு பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுப்பது சரியானது தான்.
அதே நேரத்தில் விவாகரத்து ஆன பின்பு திருமணத்தின் போது பெண் வீட்டார் கொடுத்த சீதனத்திற்குக் கணவர் குடும்பத்தினர் உரிமை கொண்டாட முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
எனவே ஜீவனாம்சத்துடன், ரூ.9 லட்சம் ரொக்கம், நகைகள், பிற பொருட்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஆண்மைக்குறைவு என விவாகரத்து.. கர்நாடக நீதிமன்றம் தெரிவித்த கருத்து!