மரணத்தை விட கொடுமையானது விவாகரத்து - வேதனையுடன் சொன்ன பிரபல நடிகர்
மரணத்தை விட விவாகரத்து செய்வது கொடுமையானது என பிரபல டிவி நடிகர் நிதிஷ் பரத்வாஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமீர்கான் விவாகரத்து மற்றும் தென்னிந்திய நடிகர்களான சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்றைய தினம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகனுமான தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார்.
இந்த தகவல் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் பிரபல டிவி நடிகர் நிதிஷ் பரத்வாஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
பி.ஆர். சோப்ரா தயாரிப்பில் உருவான மகாபாரத தொடரில் ஸ்ரீகிருஷ்ணராக நடித்து இந்திய ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த நடிகர் நிதிஷ் பரத்வாஜ் விவாகரத்து செய்வது என்பது மரணத்தை விட அதிக வலியை தரக்கூடியது என அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
58 வயதாகும் நடிகர் நிதிஷ் பரத்வாஜ் கடந்த 1991 ஆம் ஆண்டு மோனிஷா பாட்டீல் எனும் பிரபல சமையல் கலை நிபுணரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் 2005 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஸ்மிதா கேட்டை நிதிஷ் பரத்வாஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவரை 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.