மனைவி, 2 குழந்தைகளை கொன்ற கணவன் - 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த கொடூரம்!
மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று கணவன் சடலங்களோடு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடத்தையில் சந்தேகம்
உத்தரப்பிரதேசம், பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் லகான்(32). இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு பாயல்(6), ஆனந்த்(3) என்ற குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில், ராம் லகானுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவருக்குள் தகராறும் ஏற்பட்டுள்ளது. திடீரென இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதற்கிடையில், ராம் லகானிடம் அக்கம் பக்கத்தினர் மனைவி, குழந்தைகள் எங்கே எனக் கேட்டுள்ளனர்.
கணவன் வெறிச்செயல்
அதற்கு அவர், ஹோலி பண்டிகை கொண்டாட ஊருக்குச் சென்று விட்டதாக கூறியுள்ளார். ஆனால், சந்தேகம் வரவே அவர்கள் போலீஸாருக்கு புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சோதனையிட்டதில் சாக்கு மூட்டைகளில் ராம் லகானின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிணமாக இருந்தனர்.
அதன்பின் நடத்திய விசாரணையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த லகான், குழந்தைகள் கண்முன்பு ஜோதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதன்பின் அவரது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார்.
மறுநாள் ஒன்றும் நடக்காதது போல வேலைக்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். மூன்று இரவுகளாக இறந்தவர்களின் உடல்களுடன் வாழ்ந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ராம் லகான் கைது செய்யப்பட்டுள்ளார்.