'உங்கள நம்பி தான் நாங்க.. தயவு செய்து வாங்க' - இந்தியர்களிடம் மாலத்தீவு கோரிக்கை!
தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் இந்தியர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மாலத்தீவு சர்ச்சை
மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்றது முதல் இந்தியாவுடனான அந்நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் எடுத்து வருகிறது.
மேலும், கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி சுற்றுலா சென்றிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அவதூறாக பேசினர்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக வெடிக்க, பெரும்பாலான இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் சுற்றுலாவையே பெரிதும் நம்பியுள்ள அந்நாட்டு பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் கோரிக்கை
இந்நிலையில் தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராஹிம் பைசல் இந்தியர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் "இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரலாற்றுப் பிணைப்பு உள்ளது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்புச் சூழலையே மேம்படுத்த விரும்புகிறோம். மாலத்தீவு அரசும் மாலத்தீவு மக்களும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை எப்போதும் அன்புடன் வரவேற்கும்.
இந்தியர்கள் தயவுசெய்து மாலத்தீவு நாட்டிற்குச் சுற்றுலாவுக்கு வரவேண்டும். மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சராக எனது கோரிக்கை இதுதான். ஏனென்றால் எங்கள் நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவை நம்பியே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.