அதிவிரைவு ரயிலில் நபர் செய்த காரியம்; அதிர்ந்த பயணிகள் - இப்படி ஒரு ஏமாற்று வேலையா..?
அந்தியோதயா விரைவு ரயிலில் சோதனையில் ஈடுபட்ட போலி டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.
டிக்கெட் பரிசோதகர்
சென்னை தாம்பரத்திலிருந்து - நாகர்கோவில் வரை செல்லும் அந்தியோதயா அதிவிரைவு ரயில் நேற்று இரவு 11 மணியளவில் புறப்பட்டு இன்று காலை 6:10 மணியளவில் திருச்சியை வந்தடைந்தது.
அப்போது டிக்கெட் பரிசோதகர் ரயிலில் ஏறி பயணிகளிடம் டிக்கெட்டுகளை சோதனை செய்துள்ளார். அதே ரயிலில் மதுரை ரயில்வே கோட்டத்தின் தலைமை பயணச்சீட்டு ஆய்வாளர் சரவண செல்வியும் பணியில் இருந்துள்ளார்.
சிக்கிய நபர்
இவருக்கு அந்த டிக்கெட் பரிசோதகர் மீது சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், அவரது அடையாள அட்டையையும் வாங்கி சோதனை செய்துள்ளார். அப்போது அந்த நபர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ரயில் மதுரையை அடைந்ததும் அந்த போலி டிக்கெட் பரிசோதகரை ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம், ஏன் இந்த செயலில் ஈடுபட்டார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.