யூடியூப்பில் பணம் சம்பாதிப்பதற்காக வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவதா? சாட்டை துரைமுருகனுக்கு நீதிபதி கேள்வி
வழக்கு
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சாட்டை துரைமுருகன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஆதிதிராவிட சமூக மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக என் மீது திருச்சி போலீஸார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுருந்தார். இவ்வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற வேண்டும் என்ற காரணத்தால், கீழமை நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் மனுதாரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் என்பதை சுட்டிக்காட்டி, அப்போது இனி பொதுவெளியில் அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என பிரமாணபத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை குறிப்பிட்டார்.
நீதிபதி கேள்வி
மீண்டும் ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக பேசி மனுதாரர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கட்சியில் பொறுப்பில் இருப்பவர் தொடர்ந்து இவ்வாறாக பேசினால், என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்பது தெரியாதா? என்று வினவினார்.
சைபர் கிரைம் போலீசார் அதிரடி - குற்றாலத்தில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்!! அதிர்ச்சி பின்னணி
மேலும், நாகரீகமாக கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய அவர், சர்ச்சைக்குரிய வகையில் பேசி யூடியூப்பில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக மனுதாரர் பதிவிட்டுள்ளார் என நீதிபதி சுட்டிக்காட்டினார். பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதே என்ற அவர், அதனை வரம்பு மீறி பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி, அப்படி நடப்பதை ஏற்கவும் முடியாது என்றார்.
ஆகையால், இனி எப்போதும் மனுதாரர் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன், அவற்றை சமூகவலைத்தளங்களில் பதிவிட மாட்டேன் என்று நீதிமன்றத்தில் உத்திரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
சாட்டை துரைமுருகன் தரப்பில் உத்திரவாத பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை ஏற்றுக்கொண்டு, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கி, கீழமை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற உத்தரவிட்டார் நீதிபதி