Lionel Messi: உலகின் சிறந்த வீரர் - 8வது முறையாக வென்று 'மெஸ்ஸி' சாதனை!
சிறந்த வீரருக்கான பலோன் டி'ஆர் விருதை அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் 'லயோனல் மெஸ்ஸி' 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
சிறந்த வீரர்
கடந்த 1956 முதல் 'பிரான்ஸ் ஃபுட்பால்' என்ற பிரெஞ்சு கால்பந்து இதழ் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அதில் பலோன் டி'ஆர் (Ballon d’Or) எனும் உயரிய விருது சிறந்த வீரருக்காக அளிக்கப்படுகிறது.
அந்தவகையில் 2023ம் ஆண்டுக்கான விழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கால்பந்து ஜாம்பவான்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில், சிறந்து விளங்கும் வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிறந்த வீரருக்கான பலோன் டி'ஆர் விருதை அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் 'லயோனல் மெஸ்ஸி' 8வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
மெஸ்ஸி சாதனை
மேலும், இதுவரை பலோன் டி'ஆர் விருதுக்கு அதிகமுறை பரிந்துரைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி படைத்துள்ளார். கடந்த ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜெண்டினா அணி வென்றது.
அந்த அணியின் கேப்டனாகவும், சிறந்த வீரராகவும் இருந்து அந்த அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் லியோனல் மெஸ்ஸி. அந்த உலகக்கோப்பையில் அவர் 7 கோல்களை அடித்திருந்தார்.
அத்துடன் 2022-23 தொடரில் பிஎஸ்ஜி கிளப் அணிக்காக 41 போட்டிகளில், 21 கோல்கள் அடித்ததுடன், சக வீரர்கள் 20 கோல்கள் அடிக்க, உறுதுணையாக இருந்துள்ளார். 8வது முறையாக விருதை வென்று சாதனை படைத்த மெஸ்ஸிக்கு உலகம் முழுவதில் இருந்தும் அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.