முஸ்லீம் நாட்டில் பிரம்மாண்ட இந்து கோவில் - திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
மிகப்பெரிய இந்து கோவில் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.
இந்து கோவில்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப்பெரிய இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அதற்கு முன்னதாக, அங்குள்ள இந்தியர்களிடம் மோடி உரையாற்றவுள்ளார்.
அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் இந்த மெகா நிகழ்வுக்கு ஹலோ மோடி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2015ல் இந்தக் கோவிலைக் கட்டுவதற்கான நில ஒதுக்கீடை செய்தார்.
பிரதமர் மோடி
தொடர்ந்து, சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத் துறை அமைச்சர் ஹேக் நஹ்யான் முபாரக் அல் நஹ்யான் இந்த கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். அங்கு வெப்பத்தை தாங்க கூடிய இத்தாலிய பளிங்கு கற்கள் மற்றும் ராஜஸ்தான் மணற்கற்கள் மூலம் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சென்சார்கள், 7 எமிரேட்ஸ்களின் அடையாளமாக ஏழு கோபுரங்கள், 402 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் தெய்வங்கள், மயில்கள், யானைகள், ஒட்டகங்கள், சூரியன், சந்திரன், மாணவர்கள் இசைக்கருவி வாசிக்கும் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அழகு மிகுந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள்
கட்டுமான பணிக்காக 40,000 கற்களும் 1.80 லட்சம் மணகற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 108 அடி உயரம் கொண்ட இக்கட்டிடத்திற்கு 18 லட்சம் செங்கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் இளஞ்சிவப்பு மணகற்களால் பாரம்பரிய கலையுடன் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை சேர்ந்த சுமார் 2,000-க்கும் மேற்பட்ட சிற்பிகள் மற்றும் தொழிலாளர்கள் 3 ஆண்டுகளாக உழைத்துள்ளனர்.
இதன் வளாகத்தில் சுற்றுலா மையம், பிராத்தனை கூடம், நிகழ்ச்சி அரங்கம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், குடிநீர், உணவு, புத்தகங்கள், பரிசுப் பொருட்கள் கடை என இடம்பெற்றுள்ளன. இது இந்தியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய இந்து கோவில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.