தொடரும் பாலியல் வன்கொடுமை - 5 வயது சிறுமிக்கு வலிகளை கண்முன் காட்டிய கொடூர சம்பவம்!
மேட்டுப்பாளையம் அருகே 5 வயது சிறுமியிடம் கூலித் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 வயது சிறுமி
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் வியாழக்கிழமை அந்தப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக காரமடையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கக் கூலித் தொழிலாளி சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் சகோதரி தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, 5 வயது சிறுமியை உறவினர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
மேலும், இது குறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலிருந்து காரமடை போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் காரமடையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பத்திரசாமி (45) என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீஸார் கூலி தொழிலாளி பத்திரசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.