இளம்பெண்களிடம் ‘ஹிஜாப் சேலஞ்ச்' பிரபல யூடியூபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்!
கோவையில் நடைப்பயிற்சி சென்ற பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச் நடத்திய யூடியூபர் அனஸ் அகமது என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ஹிஜாப் சேலஞ்ச்
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த அனஸ் அகமது . இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சிக்குச் சென்ற இளம்பெண்களிடம் ‘ஹிஜாப் சவால்’ என்ற பெயரில் ஒரு போட்டியை நடத்தியுள்ளார்.
அப்போது இளம் பெண் சிலரிடம் ஹிஜாப் அணிந்து பார்க்க விருப்பமா என தொகுப்பாளரை வைத்து கேள்வி கேட்க வைத்தார். இதற்க்கு விருப்பமுள்ள சில பெண்கள் ஹிஜாப் அணிந்தும் பார்த்தனர். அப்போது அவர்களைப் புகைப்படம் எடுத்தனர்.
பின்பு ஹிஜாபுடன் இருக்கும் புகைப்படங்களை இளம்பெண்களிடம் தொகுப்பாளர் காட்டினார். இது தொடர்பான வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
யூடியூபர் கைது
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ‘பாரத் சேனா’ என்ற அமைப்பைச் சேர்ந்த குமரேசன், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், யூடியூபர் அனஸ் அகமது மற்றும் வீடியோவை பதிவு செய்தவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து யூடியூப் சேனலின் உரிமையாளர் அனஸ் அகமது கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.