ஹிஜாப் சர்ச்சை: கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 21,000 மாணவர்கள் புறக்கணித்தனர்
கர்நாடகாவில் பள்ளி,கல்லுாரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்த நிலையில் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லுாரியில் படிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லுாரிக்கு வந்தனர்.
இதையடுத்து பள்ளி, கல்லுாரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் அடங்கிய அமர்வு பள்ளி, கல்லுாரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிபடுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும் எனவும்,
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மத்தியில் கர்நாடகாவில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. 28-ந் தேதி முதல் வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8.76 லட்சம் மாணவ - மாணவிகள் எழுத உள்ளனர்.
தேர்வு எழுத ஏதுவாக 3 ஆயிரத்து 400 இடங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாணவிகள் ஹிஜாப் அணிந்து பொதுத்தேர்வு எழுத அனுமதியில்லை என்று கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்திருந்த நிலையில், நேற்று தேர்வு தொடங்கியபோது முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்துள்ளனர்.
அவர்களை தேர்வு கண்காணிப்பாளர்கள் தேர்வு எழுதவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். அதேபோல் பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுத ஹிஜாப் அணியாமல் வந்ததாகவும் அவர்களிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது,
தேர்வு அறைக்குள் ஹிஜாப் அணிவதை விட தேர்வு எழுதுவது தான் எங்களுக்கு முக்கியம் என்று தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கர்நடகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தகுதிப்பெற்றவர்களில் சுமார் 21 ஆயிரம் பேர் நேற்று தேர்வு எழுத வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அம்மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ள நிலையில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக பர்ர்க்கப்படுகிறது.