ஹோட்டலில் பற்றி எரிந்த தீ - தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் கருகி பலி
ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்து
கொல்கத்தா, மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது வேகமாக பரவியதால் அருகில் இருந்தவர்களால் அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பின் சம்பம் குறித்து அறிந்த 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. கடும் புகையால் ஹோட்டல் முழுவதும் நிரம்பியதால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியவில்லை. பின்னர் அவர்கள் ஏணிகள் மூலம் நான்காவது மற்றும் ஐந்தாவது மாடியின் ஜன்னல்களை உடைத்து உள்ளே சென்றனர்.
14 பேர் பலி
தொடர்ந்து பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோட்டலில் சிக்கியிருந்த பலர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் உள்ள சுமார் 47 அறைகளிலும் மக்கள் இருந்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.