தாலி, பூநூலுக்கு தடை - ரயில்வேத் துறை தேர்வால் வெடித்த சர்ச்சை
ரயில்வேத் துறை தேர்வில் தாலி, பூநூலுக்கு தடை விதிக்கப்பட்டது.
ரயில்வே தேர்வு
இந்திய ரயில்வே துறையில் செவிலியர் கண்காணிப்பாளருக்கான கணினி வழியில் நுழைவுத் தேர்வு ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மங்களூரில் உள்ள போண்டேலை தளமாகக் கொண்ட மானெல் ஸ்ரீனிவாஸ் நாயக் பெசன்ட் வித்யா கேந்திராவில் நடக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு அனுமதிச் சீட்டில் கம்மல், மூக்குத்தி, வளையல்கள் உள்ளிட்டவற்றை அணியக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தாலி மற்றும் பூநூல் ஆகியவற்றை தேர்வர்கள் அணிந்திருக்கக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்,
வெடித்த சர்ச்சை
“மதம் சார்ந்த விஷயங்களான தாலி, பூநூல் போன்றவற்றை தேவைப்படும்பட்சத்தில் சோதனை செய்யலாம். ஆனால், அதனை அகற்றச் சொல்வது சரியானது கிடையாது. காதணிகள், தாலி, பூநூல் அல்லது இடுப்புப் பட்டை போன்றவற்றை அவர்கள் சரிபார்க்கலாம் என்று நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம்.
அது தவறல்ல. ஆனால், கடந்த காலங்களில், மக்கள் தங்கள் காதுகளில் ஒரு சிறிய சாதனத்தை வைத்திருப்பது போன்ற சில பிரச்சினைகள் இருந்தன. அது சரியல்ல. அதேசமயம் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ரயில்வே துறை இணையமைச்சர் வி. சோமண்ணா தலையிட்டு, தேர்வின் போது தேர்வர்கள் இந்த சின்னங்களை அணிவதைத் தடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.