30 கோடி மக்களை தாக்க தயாராகும் நிலநடுக்கம்; அதுவும் இந்தியாவில்.. அதிர்ச்சி தகவல்
இந்தியாவின் 30 கோடி மக்களை நிலநடுக்கம் தாக்க தயாராக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
மியான்மரில் அண்மையில் ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதில், அண்டை நாடான தாய்லாந்தும் பாதிக்கப்பட்டது. சுமார் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4,500 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் 300 அணுகுண்டுகளுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளதாக நிபுனர்கள் தெரிவித்தனர். அதன்படி, வட இந்தியாவில் இமயமலை பகுதியில் தவிர்க்க முடியாத வகையில், ரிக்டர் அளவுகோலில் 8 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவிஇயற்பியலாளரான ரோஜர் பில்ஹாம் கூறுகையில், ஒவ்வொரு நூற்றாண்டிலும் திபெத்தின் தென்முனைக்கு அடியில் 2 மீட்டர் அளவுக்கு இந்தியா சரிந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில், இமயமலையை கடுமையாக தாக்கும் அளவிலான அழுத்தம் வெளியிடப்படாமல் உள்ளது.
புவிஇயற்பியலாளர் எச்சரிக்கை
அது நிச்சயம் நிகழும். சாத்தியத்திற்கான கேள்வியே இல்லை. இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி, 59 சதவீதம் அளவுக்கு, நிலநடுக்க பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக உள்ளன. இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் அதிக ஆபத்து மண்டல பகுதிகளில் அமைந்துள்ளன.
டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களும் ஆபத்து ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன. டெல்லி நிலநடுக்க மண்டலம் 4-ல் வருகிறது. இந்தியாவில் நிலநடுக்க அதிர்வுகளை விட கட்டிடங்களே அதிக ஆபத்து ஏற்படுத்துபவையாக உள்ளன. நிலநடுக்க தடுப்பு கட்டுமானங்களுக்கான விதிகள் உள்ளன.
ஆனால், அவை எப்போதும்போல் அலட்சியப்படுத்தப்படுகின்றன. நிலநடுக்கத்தில் இருந்து தப்பும் வகையில் மருத்துவமனைகள், பள்ளிகள், மின் உலைகள் வடிவமைக்கப்படுவதில்லை. பூமி குலுங்கும்போது, இவையே முதலில் சரியும் என எச்சரித்துள்ளார்.